பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
அவிநாசி: கற்றல், கற்பித்தல் முறைகளில் நவீன உத்திகளை கையாள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி, நகரில் உள்ள ஒரு அரசு பள்ளி, கிராமப்புறத்தில் ஒரு பள்ளி தேர்வு செய்யப்படுகிறது. இவ்விரு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், பரஸ்பரம் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள நிகழ்வை அறிந்து கொள்வர். திருப்பூர் மாவட்டத்தில் குமார்நகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி நகர பள்ளிகள் பட்டியலிலும், கிராமப்புற பள்ளிகள் பட்டியலில் அவிநாசி அருகே நம்பியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டது. கடந்த அக்., 24 ல் நம்பியம்பாளையம் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 20 பேர் இரண்டு ஆசிரியர்கள், குமார்நகர் பள்ளிக்கு வந்திருந்தனர். நேற்று குமார்நகர் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், 20 பேர், ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோருடன் நம்பியம்பாளையம் பள்ளிக்கு சென்றனர். இவர்களை தலைமை ஆசிரியர் செல்வமணி வரவேற்றார். ஆசிரியை புவனேஸ்வரி, குமார்நகர் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோவிலின் தல வரலாறு குறித்து விளக்கப்பட்டது. கோவில் தல வரலாறு ‘சிடி’ மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.