பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு கிராமத்தில் ஒளிலாய சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து யாகம் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சுக்லயா-, தர்மபோதி ஆகியோர் இந்து மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்து கலாச்சாரப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்களின் திருமணம் ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திரன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
மாப்பிள்ளை மற்றும் பெண் அழைப்பு, ஹோமம், மாப்பிளைக்கு பூ நூல் அணிதல், கன்னியா தானமும், தொடரந்து மங்கள வாதியங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமகள் அம்மி மிதித்து,அருந்ததி பார்க்கும் சடங்கும், கோபூஜையும் நடந்தது. திருமணத்தை அருன் சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். இதனையடுத்து மணமக்கள் அங்கு வந்திருந்த மக்களை வணங்கினர், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட அமெரிக்க தம்பதிகளை கிராமக்கள் அன்புடன் வாழ்த்தினர். இதையடுத்து தம்பதியினர் தங்களது திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் விருந்து அளித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.