பதிவு செய்த நாள்
14
நவ
2016
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த அன்னாபிஷேகத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று, அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்ரவரர் ஆகியோருக்கு, 130 கிலோ அரிசியால் சாதம் வடித்து அன்னாபி ?ஷகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதனால், நேற்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை, 6:01 மணி முதல் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், 150 கிலோ அரிசியால் சாதம் செய்து, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஐப்பசி மாத பவுர்ணமி நேற்றிரவு, 10:29 மணிக்கு துவங்கியது. இன்று இரவு, 8:09 மணி வரை பவுர்ணமி உள்ளது. நேற்றிரவு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. 50 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.