ஆழ்வார்திருநகரி : ஆழ்வார்திருநகரி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி மடாலயத்தில் குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது. கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி குருபூஜை விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடக்கும். ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமி மடாலயத்தில் 81வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. குருபூஜையை முன்னிட்டு காலையில் செல்வசுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பால்குட பவனி துவங்கியது. ஆதிநாத ஆழ்வார் கோயில் ரதவீதிகள், பல்வேறு தெருக்கள் வழியே சென்ற பால்குட பவனி மடாலயத்தில் நிறைவு பெற்றது. பின்னர் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடந்தது. முன்னதாக அன்னதான மண்டபம் திறப்பு விழா நடந்தது. இரவு சுவாமிபடம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தெருக்களில் வலம் வந்தது. அடுத்த நாள் இரவு திருவிளக்கு வழிபாடு நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாயாண்டி சுவாமிகள் மடாலய கைங்கர்ய அடியார்கள் குழுவினர் செய்திருந்தனர்.