திருப்பதிக்கு இணையாக மீனாட்சி அம்மன் கோயில் தரம் : ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2016 11:11
மதுரை: ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு இணையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி கமிஷனர் சந்தீப்நந்துாரி, கோயில் இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் நாளை (நவ.,18) திருப்பதியில் நேரடி ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சர்வதேச அளவில் அதிகம் வழிபடும் புனிதத் தலமாக திருப்பதி கோயில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ஆண்டுக்கு நான்கு கோடிக்கும் அதிகமானோர் திருப்பதி வருகின்றனர். பிரமோற்சவம் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்து விடுகிறது. துணை ராணுவ பாதுகாப்பு: இலவச தங்குமிடம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இரண்டு மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய ஏற்பாடு. நடைபாதை பக்தர்களுக்கு சுலப தரிசனம். நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு ஏ.சி. அறைகள். இலவச பஸ், முடி காணிக்கை, உடைமைகள் பாதுகாப்பு அறை, சுகாதாரமான தரமான இலவச உணவு வசதி. இலவச மற்றும் கட்டண பிரசாதம். துணை ராணுவ பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் பக்தர்களுக்கு தடையின்றி கிடைக்க திருப்பதி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ஸ்மார்ட் சிட்டி: ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் மதுரை இடம் பெற்றுள்ளது. இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகள் மேம்பாடு காணவுள்ளது. எனினும் திருப்பதியை ஒப்பிடும்போது மீனாட்சி அம்மன் கோயிலில் வசதிகள் குறைவு. திருப்பதிக்கு இணையாக மீனாட்சி அம்மன் கோயிலை தரத்தை உயர்த்த இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாநகராட்சி கமிஷனர் சந்தீப்நந்துாரி, கோயில் இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் நாளை திருப்பதிக்கு சென்று நேரடி ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு: திருப்பதியில் ஆய்வு மேற்கொண்ட பின் அங்கு வழங்கப்படும் வசதிகள் போல், மீனாட்சி அம்மன் கோயிலில் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள்; கோயில் பாதுகாப்பில் துணை ராணுவம், ஆன் லைன் தரிசன முன்பதிவு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் குறித்து விரிவான ஆய்வறிக்கையை மாநகராட்சி கமிஷனர், கோயில் இணை கமிஷனர் ஆகியோர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனரிடம் தாக்கல் செய்யவுள்ளனர். இதையடுத்து திருப்பதிக்கு இணையான வசதிகள் மீனாட்சி அம்மன் கோயிலில் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.