பதிவு செய்த நாள்
17
நவ
2016 
11:11
 
 சபரிமலை: பக்தர்களின் வசதிக்காக பம்பை- சன்னிதானம் பாதையில் அவசர மருத்துவ சேவை வாகனம் ஓட வனத்துறை அனுமதி அளித்துள்ளது, என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சபரிமலையில் அவர் கூறியதாவது: சபரிமலை பாதையில் உள்ள ஓட்டல், கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பக்தர்கள் புகார் செய்ய கட்டணம் இல்லா போன் எண் அறிவிக்கப்படும்.சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க, தினமும் மூன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படும். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு அலுமினிய குடுவைகளில் குடிநீர் வழங்கப்படும். இதற்காக 30 தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பர். சபரிமலை வரும் ரோடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பையில் மருத்துவ வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் இந்த ஆண்டு மினி ஆப்பரேஷன் தியேட்டர், ஐ.சி.யூ., செயல்படும். சன்னிதானத்தில் இருந்து நோயாளிகளை உடனடியாக பம்பை கொண்டு செல்ல இந்த ஆண்டு முதல் சிறிய அவசர சேவை வாகனம் இயக்கப்படும். இதற்கு தடையாக இருந்த வனத்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. தனியார் அன்னதானம் தடை செய்யப்பட்ட நிலையில், தேவசம்போர்டு சார்பில் இரண்டாயிரம் பேர் அமர்ந்து உண்ணும் அன்னதான மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. இதில், 20 நிமிடத்தில் இரண்டாயிரம் பேர் சாப்பிடமுடியும். இதனால், ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியும்.20 நாட்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என சுழற்சி முறையில் மூன்று பேர், சபரிமலையில் பணிகளை ஒருங்கிணைப்பர். அரசு சார்பில் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக ரதீஷ்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களை தனலட்சுமி வங்கி மூலம் பக்தர்களுக்கு மாற்றி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர் அஜய்தரயில், ராகவன் உடனிருந்தனர்.