பதிவு செய்த நாள்
17
நவ
2016
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பசுமை தீர்ப்பாயம் அனுமதித்துள்ள இடங்களில் மட்டும், கிரிவல பாதை விரிவாக்க பணிகள் நடக்கின்றன. திருவண்ணாமலையில், 64 கோடி ரூபாய் மதிப்பில், கிரிவல பாதையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு நிதி ஒதுக்கி, பணிகள் நடந்தன. சாலை விரிவாக்க பணியில், மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகாரை அடுத்து, பசுமை தீர்ப்பாயம், தானாக முன்வந்து, பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது.இது குறித்து, ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. குழுவில் இடம் பெற்ற ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் மற்றும் ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாப்பு அலுவலர் சேகர் ஆகியோர், செப்., 28, 29ல், கிரிவல பாதையை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, கிரிவல பாதை கூட்ட நெரிசலை கண்காணிக்க, அக்., 15ல் பவுர்ணமியன்று, இரண்டாவது முறையாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நவ., 8ல், பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, திருவண்ணாமலை - வேலுார் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து, காந்தி சிலை சந்திப்பு வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. தீப திருவிழாவுக்குள், சாலை அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த பின், புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் பணிகள் நடக்க உள்ளன.