பதிவு செய்த நாள்
17
நவ
2016
11:11
நாமக்கல்: கார்த்திகை முதல் நாளான நேற்று, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், நாமக்கல் ஐயப்பன் கோவிலில், மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜை, ஆண்டு தோறும் கார்த்திகை, 1ல் துவங்கும். அன்று முதல், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்குவர். ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள், இருமுடி கட்டி, கோவிலுக்கு சென்று வந்து, விரதத்தை முடித்துக் கொள்வர். இந்த ஆண்டு, ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று (கார்த்திகை 1) நாமக்கல் - மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில் நடந்தது. குருசாமி முன்னிலையில், மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், விரதம் கடைபிடிக்கத் துவங்கினர். அதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நேற்று, வழக்கத்தை காட்டிலும், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தொடர்ந்து, மலை அணிந்த பக்தர்கள், தங்கள் குடும்பத்துடன், ஐயப்பன் சுவாமியை வழிபட்டனர். கடைகளில் ருத்ராட்சை மற்றும் துளசி மாலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளதுடன், கடைகளில், காவி, கறுப்பு வேட்டி, துண்டுகளும் தருவிக்கப்பட்டுள்ளன.