பதிவு செய்த நாள்
17
நவ
2016
11:11
சேலம்: கார்த்திகை மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, மாலை அணிந்து, பக்தர்கள், விரதத்தை துவக்கினர். கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பனை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், 48 நாள் விரதமிருந்து, இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வர். ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், 1ல், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறந்து, மண்டல பூஜை துவங்கும். அதையொட்டி, சேலத்தில் உள்ள ஏராளமான ஐயப்ப பக்தர்கள், நேற்று, சபரிமலைக்கு மாலை அணிய துவங்கினர். இதனால், நேற்று காலை முதல், அனைத்து ஐயப்பன் கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, சேலத்தில், தர்மசாஸ்தா ஆஸ்ரமம், ராஜகணபதி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்ரமணியர், பேர்லேண்ட்ஸ் முருகன், குமரகிரி தண்டாயுதபாணி, கந்தாஸ்ரமம், காசி விஸ்வநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், ஆத்தூர் வெள்ளை பிள்ளையார், குரங்குச்சாவடி ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று, பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாள் விரதத்தை துவக்கினர். கறுப்பு, ஊதா, காவி வேட்டி அணிந்த பக்தர்கள், குருசாமி மூலம், மாலை அணிந்து கொண்டனர்.