பதிவு செய்த நாள்
17
நவ
2016
12:11
திருத்தணி : முருகன் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக, நவீன முடி காணிக்கை மண்டபம், இரு இடங்களில் கழிப்பறை கட்டும் பணிகளுக்கு, 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், ஆணையரின் உத்தரவு கிடைக்காததால், திட்டம் தாமதமாகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, மலைக் கோவிலில் முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்நிலையில், முடி காணிக்கை செலுத்துவதற்கு மண்டபம் இல்லாததால், சிமென்ட் சீட் அமைக்கப்பட்ட, தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்தம் இடத்தில் இருந்து கோவில் நுழைவுவாயில் மற்றும் கழிப்பறைக்கு அரை கி.மீ., துாரத்திற்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளதால், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், மலைக்கோவிலில் நவீன முடி காணிக்கை மண்டபம் மற்றும் நடந்து வரும் பக்தர்கள் வசதிக்காக இரு இடங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கு என, கோவில் நிதியில் இருந்து, 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை பணி துவக்கபடாமல் காலதாமதம் ஆகி வருகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,மலைக்கோவிலில் நவீன முடி காணிக்கை மண்டபம், இரு கழிப்பறைகள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கேட்டு, பரிந்துரை கடிதம் எழுதியுள்ளோம். ஆணையரின் ஒப்புதல் கிடைக்காததால் மேற்கண்ட பணிகள் காலதாமதம் ஆகிறது. இருப்பினும், விரைவில் பணிகள் துவங்கி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.