பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் நடை கூடுதல் நேரம் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2016 12:11
திருப்புத்துார், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விரத காலத்தை முன்னிட்டு கோயில் நடை கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது. இக்கோயிலில் வழக்கமாக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும். தற்போது கார்த்திகை துவங்கியுள்ளதால் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் தங்களது விரத காலத்தை துவக்கியுள்ளனர். இதனால் பிள்ளையார்பட்டிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும். காலை முதல் இரவு வரை பக்தர்கள் வருகை காணப்படும். அவர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் தற்போது மதியம் நடை சாத்தாமல் காலை 6 மணி முதல் இரவு 8 .30 மணி வரை நடை திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். கார்த்திகையில் பதவியேற்ற புதிய அறங்காவலர்கள் நச்சாந்துப்பட்டி அழ.பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி என்.மாணிக்கவாசகம் செட்டியார் கூறுகையில்,விரத காலத்தில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் நடை திறப்பு கார்த்திகை ஒன்று முதல் தைப்பூசம் வரை நீடிக்கும். மார்கழியில் அதிகாலையில் மேலும் கூடுதல் நேரம் திறக்கப்படும். என்றனர்.