கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி மலை கோவில் கிரிவலப்பாதையான தேரோடும் வீதி, கிருஷ்ணசாமிபுரம், விவேகானந்தர் வீதி மற்றும் மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் ஆகிய ரோடுகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. தைப்பூசத்தன்று மூன்று நாட்கள் பொன்மலை வேலாயுதசாமி மலை கோவில் அடிவாரத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம். ரோடு பழுதடைந்திருந்ததால், தேரோட்டம் நடத்துவதற்கு சிரமம் என்ற சூழ்நிலை இருந்தது. நான்கு வழிச்சாலை பணியும் கிணத்துக்கடவு பகுதியில் நடந்து வருகிறது. மேம்பாலம் அமைக்கும்போது, வாகனங்களை தேரோடும் வீதி வழியாக சுற்றி விட புதிய தார்ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதே போல், மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, பேரூராட்சி அலுவலகம் முன்பு செல்லும் ரோடும் புதுப்பிக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், புதிய தார்ரோடு போடும் பணி துவங்கியுள்ளது.