பதிவு செய்த நாள்
21
நவ
2016
11:11
கீழக்கரை: ராமநாதபுரம் அருகே 300 ஆண்டுகள் பழமையான மூலிகை ஓவியங்களை புதுப்பிக்க வேண்டும்,என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது. பச்சை மரகத நடராஜர் சன்னதி, பிரகார மண்டபம், மங்களேஸ்வரி அம்மன் அர்த்த மண்டபம், முதல் பிரகாரத்தில் உள்ள தபசு மண்டபம் ஆகிய இடங்களில் மூலிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் காண்போரின் மனதை கவர்வதாக அமைந்துள்ளது. கி.பி., 16ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியம், தற்போது மங்கலாகவும், வண்ணங்கள் நிறம் குறைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. தொல்லியல் வல்லுநர் கூறுகையில், ‘சிவப்பு, மஞ்சள், நீலம், கருமை, பச்சை ஆகிய வண்ணங்களை பெற காரை சிவப்பு கற்கள், இண்டிகோ செடி, மூலிகை செடியின் வேர்கள், மரப்பட்டைகள், விதைகள், ஆகியவற்றை பொடி செய்து, தேவையான தொழில்நுட்ப விஷயத்துடன் கூடிய பார்முலா மூலம் வரையப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் பழமையான மூலிகை வர்ணங்கள், கலவைகள், சேர்மானங்கள் குறித்த விஷயத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாலும், அவை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. மரகத நடராஜரின் சன்னதி முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட 12 ராசிகள், நவ கிரகங்களின் உருவபடத்தின் வரிசைகள் உள்ளன. உத்தரகோசமங்கை உருவான ஸ்தல வரலாறு குறித்த விஷயங்கள் ஓவிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது. தபசு மண்டபத்தில் அம்மன், எவ்வாறு சிவனை அடைய வேண்டி தாம் பட்ட கஷ்டங்கள், தவக்கோலங்கள் இவற்றை விளக்குகிறது. உப்புக்காற்று, வாடைக்காற்று, சீதோஷ்ண நிலை இவற்றை பல்வேறு காலகட்டங்களை கடந்து வருகிறது என்றார். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பொலிவு பெற செய்ய ஆவண செய்ய வேண்டும்.