கார்த்திகை சோமவாரம்: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2016 12:11
மதுரை: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. 1008 சங்குகள் சிவலிங்க வடிவத்தில் பூஜையில் இடம் பெற்றிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்,
சங்கினால் சிவனுக்கு, கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள்கிழமை) அபிஷேகம் செய்வர். திங்கள்கிழமை சந்திரனுக்கு உரியது. கார்த்திகை சோமவார விரதத்தைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கடைபிடித்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணமான தம்பதிகள் கடைபிடித்தால் கால மெல்லாம் ஒற்றுமையாய் வாழ்வர். கார்த்திகை சோமவாரத்தில் அருவிகளில் நீராடுவது நல்லது. இந்நாளில், குற்றாலத்தில் பெண்கள் கூட்டம் அலை மோதும். தம்பதி சமேதராக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமியையும் வணங்கி வரலாம்.
சந்திரனே சோமவார விரதமிருந்து சிவனின் தலையில் இருக்கும் பாக்கியம் அடைந்தான். சந்திரனுக்கு ‘சோமன்’ என்ற பெயருண்டு. எனவே, இது சோமவார விரதம் ஆயிற்று. சோமவார விரதத்தன்று பகலில் உணவைத் தவிர்ப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் சிவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே, அவரைக் குளிர்விக்கும் விதமாக சங்காபிஷேகம் செய்வர். இந்த மாதத்தில் சூரியன் தன் பகைவீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் (சக்தி இழந்து) இருப்பதால் உலக மக்களுக்கு தோஷம் உண்டாகிறது. இதிலிருந்து தப்பிக்கவே சிவனைச் சரணடைந்து சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.
சோமவாரத்தன்று வில்வ இலையால் சிவனை அர்ச்சித்தால் பிறவிப்பிணியும் தீரும். சிவன் மட்டுமல்ல! கார்த்திகையில் பெருமாளையும் தாமரை மலரால் அர்ச்சிக்க வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். ஜோதிடத்தில் சந்திரன் மாத்ருகாரகன். அதாவது தாய் ஸ்தானத்தை குறிப்பவர். தாயாரின் உடல்நிலை பலம் பெறவும், தாயாருடன் உறவு பலப்படவும் சோமவார விரதம் துணை செய்யும். சந்திர திசை, சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதம் இருப்பது நல்லது. ஒரு நபருக்கு மாதத்தில் உத்தேசமாக இரண்டரை நாட்கள் சந்திராஷ்டமம் வரும். இந்த நேரத்தில் மனபலம் குறைவாக இருக்கும். இதற்கு பரிகாரம் தாய் தந்தையை வணங்குவது தான். சோமவார விரதத்தை தவற விட்டவர்கள் தங்கள் மனதைரியத்தை தவற விடுகிறார்கள் என்பர்.