பதிவு செய்த நாள்
21
நவ
2016
12:11
திருத்தணி : வீரஆஞ்சநேயர் கோவிலில், பக்தி ஆஞ்சநேயர், ராமர், சீதை மற்றும் லட்சுமணன் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி, மேட்டுத் தெருவில், வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக பக்த ஆஞ்சநேயர், ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய சிலைகள், நேற்று காலை, 9:00 மணிக்கு பிரதிஷ்டை செய்து, கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில், யாக சாலையில், 54 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, ஜோதிசாமி தெருவில் இருந்து, 108 பால்குடம் பக்தர்கள் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தனர். மூலவர் வீரஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின், மூலவர், பக்த ஆஞ்சநேயர், ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் உற்சவர் கோவில் வளாகத்தில் வீதியுலா நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை, நெமிலி ரங்கநாத பட்டாச்சாரியார் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட குருக்கள் நடத்தினர்.