சபரிமலை பெயர் மாற்றம், பெண்களுக்கு அனுமதி: தேவசம்போர்டில் கருத்து வேறுபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2016 06:11
சபரிமலை: சபரிமலை கோயில் பெயர் மாற்றம் மற்றும் பெண்களுக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பெயர் மாற்றத்தை எதிர்ப்பதாக உறுப்பினர் ராகவன் கூறியுள்ளார்.
சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில், தற்போது ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் தேவசம்போர்டு கூட்டத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் செயலர் பிறப்பித்த உத்தரவில் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந் ததாக கூறியிருந்தார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில், வயது பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்ற நிலைபாட்டை வலுப்படுத்துவதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. சாஸ்தா திருமணமானவர் என்பதால் அதன் அடிப்படையில் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில் தேவசம்போர்டு இந்த நடவடிக்கை எடுத்தது. போர்டின் இந்த முடிவை தான் எதிர்ப்பதாக உறுப்பினர் ராகவன் கூறியுள்ளார். கூட்டத்துக்கான அஜன்டாவில் தனது எதிர்ப்பு குறிப்பை பதிவு செய்துள்ளாதாக கூறிய அவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் நிலைபாட்டை தான் ஆதரிப்பதாக கூறினார். தேவசம்போர்டில் ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர் அஜய் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ராகவன் மா.கம்யூ., கட்சியை சேர்ந்தவர். வயது பெண்களை அனுமதிக்க கூடாது என்று தலைவர் மற்றும் அஜய் ஆகியோர் கூறுகின்றனர். ராகவன் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதால் தேவசம்போர்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சபரிமலை பெயர் மாற்றம் பற்றி தேவசம்போர்டு தன்னிடம் எதுவும் ஆலோசிக்க வில்லை என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.