பதிவு செய்த நாள்
01
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், நேற்றிரவு நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டது. இன்று, அருணாசலேஸ்வரர் கோவில் காவல் தெய்வமான, பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9ல் பஞ்ச மூர்த்தி மஹா ரத தேரோட்டமும், 12ல் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழா சிறப்பாக நடக்க வேண்டி, நேற்றிரவு துர்க்கை அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டது. இதையொட்டி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வாண வேடிக்கையுடன், இரவு காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்ததது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இன்று இரவு அருணாசலேஸ்வரர் கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மனிடம், விழா சிறப்பாக நடக்க வேண்டியும், பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காத்தருள வேண்டி பிரார்த்தனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் பூஜை நடத்தப்படும். இரவு சிம்ம வாகனத்தில், பிடாரி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.