பதிவு செய்த நாள்
01
டிச
2016
03:12
பரந்தாமன் எடுத்திட்ட அவதாரங்கள் அனைத்துமே தனிச்சிறப்பு வாய்ந்தவைதான். என்றாலும், மற்றவற்றை விஞ்சி நிற்கிறது நரசிம்ம அவதாரம். உக்ர சிங்க முகமும், அதில் தெரியும் கோரைப் பற்களும், வலுவான புயங்கள் கொண்ட மனித உடலுமாக நரசிம்மர் பல கோயில்களில் சேவை சாதிக்கிறார். லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், உக்கிர நரசிம்மர் என்றும் பல வடிவங்களில் வழிபடப்படுகிறார். பாலக பக்தன் பிரகலாதன் தன்மேல் கொண்ட தூய அன்பிற்காகவும், தீயவன் இரண்ய கசிபுவை அழிப்பதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த திருவடிவம்தான் நரசிம்ம ரூபம்.
அது மட்டுமா? இருப்பதிலேயே சிக்கலான அவதாரமல்லவா நரசிம்ம அவதாரம்? இரண்யனின் வரத்தின்படி இரவிலோ பகலிலோ மரணம் ஏற்பட முடியாது, மனிதனாலோ மிருகத்தாலோ மரணம் நிகழக்கூடாது, ஆயுதமும் இல்லாமல் ஆகாயம் பூமியிலும் இல்லாமல் அவனை வதைக்க வேண்டும். அதனால்தான் தனது ஆற்றல் அனைத்தையும் ஒன்று சேர்த்து உக்கிர ரூபமாய் பிரகலாதன் சொல்லிய தூணிலிருந்து தோன்றினார் நரசிம்மப்பெருமாள். இரவும் பகலும் கூடும் பிரதோஷநேரத்தில், தனது மடியில் அரக்கனை இருத்திக்கொண்டு வாசற்படியில் அமர்ந்து, தன் தொடைமீது கிடத்தி, கை நகங்களால் கிழித்து வதைத்தார். அதனால்தான் இன்றைக்கும் பல பெரியவர்கள் வாசற்படியில் அமரக்கூடாது, பிரதோஷ நேரத்தில் தலைவாருதல், உண்ணுதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்கின்றனர்.
நரசிம்ம ஜெயந்தி:
வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில், சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம். பிரதோஷ வேளை சிவனுக்கு மட்டுமே உரியது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் நரசிம்ம அவதாரம் அந்த வேளையில் நிகழ்ந்ததால் நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக பிரதோஷம் கருதப்படுகிறது. எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.
நரசிம்ம வழிபாடும் விரதமும்:
நரசிம்மரின் அவதாரத் திருநாளான நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை. அபிசார தோஷம் எனப்படும் பில்லி சூனிய பிரச்னை, கடன் தொல்லை, வீட்டில் எப்போதும் சண்ட சச்சரவு, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேரவே இல்லை என்ற ஏக்கம் போன்ற பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனி போல விலகிவிடும்.
நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து நீராடி நாமம் தரித்துக் கொள்ள வேண்டும். லட்சுமி நரசிம்மர் படத்தை செவ்வரளி மலர்கள், துளசி போன்றவற்றால் அலங்கரிக்கவேண்டும். பானகம் அல்லது சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை
நரசிம்மரே குரு, நரசிம்மரே இறைவன்
அவரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறார்
அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை நான் சரணடைகிறேன்!
என்று சொல்லி 12 முறை விழுந்து வணங்கவேண்டும். தெரிந்தவர்கள் நரசிம்ம காயத்திரியையும் 12 முறை சொல்லலாம். தீப தூபங்கள் காட்டி விட்டு பிரசாதத்தை நிவேதனம் செய்யவேண்டும். அதை வீட்டிலுள்ளோர் மட்டுமே உண்ணுவது நலம். பிரசாதம் உண்ணுமுன்பு யார் விரதம் இருப்பதாக வேண்டிக் கொண்டுள்ளார்களோ அவர்கள் படத்தின் முன் வந்து இன்ன காரியத்துக்காக தொடர்ந்து குறிப்பிட்ட மாதம் சுவாதி நட்சத்திர நாளில், எல்லா நலன்களும் அருள்வாய் லட்சுமி நரசிம்மா என்று மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று முழுவதும் விரதம் இருப்பவர்கள் திரவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். இந்த பூஜையை பிரதோஷ நேரத்தில்தான் செய்யவேண்டும்.
21 அல்லது 45 நாட்கள் விரதம் இருப்போரும் உண்டு. அத்தனை நாட்களும் உபவாசம் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பிரதோஷ வேளையில் நரசிம்மரை 12 முறை வணங்கி எழ வேண்டும். பானகம் நிவேதிக்கவேண்டும். அசைவ உணவு, பழைய உணவு, கடையில் கிடைக்கும் உணவு ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது அவ்வளவுதான். இரவில் இலகுவான உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம்.
விரதம் முடியும் அன்று நரசிம்மர் சன்னதி இருக்கும் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை நிறைவேற மனமுருகி வேண்ட வேண்டும். ஏழை, எளியோர்க்கு இயன்ற உணவும், நீரும் தானமளித்தல் சிறப்பு.
மேற்கூரிய முறையில் நரசிம்ம ஜெயந்தி அன்று தொடங்கி 21 அல்லது 45 நாட்கள் அல்லது மாதாமாதம் சுவாதி நட்சத்திர நாளில் விரதம் இருந்தால் தீராத துன்பங்கள், கடன் தொல்லை, தீவினைகள், தோஷங்கள் அனைத்தும் ஓடியே போய் விடும். பிரகலாதனுக்காகவும், ஆதிசங்கரருக்காகவும் அருள்புரிந்த நரசிம்மப் பெருமான் நமக்காவும் நம் துன்பங்களைத் துடைக்கவும் அருள்புரிவார்.
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபாடு செய்து செல்வம், ஆரோக்யம், நீண்ட புகழ் இவற்றோடு நீண்ட காலம் வாழ்ந்திடும் வரம் பெறுங்கள். மற்றவர்களையும் வாழ வைப்போம்.
ஓம் வஜ்ர நகாய விதமஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்மப் பிரசோதயாத்