பதிவு செய்த நாள்
02
டிச
2016
12:12
திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் குளத்தை சுற்றி, ஆக்கிரமிப்பை தடுக்க, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், உலக பிரசித்தி பெற்றது. கோவிலின் வெளியே, ஆதிசேஷ தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளம் சமீபத்தில் தான், சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாட வீதி கோவில் குளத்தின் சுற்று சுவரை ஒட்டி, கடந்த இரு வார காலமாக, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், குளத்தை ஒட்டியுள்ள, கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆக்கிரமிப்புகள் முழுமையாக தடுக்கப்படும். இப்பணி, ஓரிரு வாரங்களில் முடிவடையும்’ என்றனர்.