டிச.,6 பாதுகாப்புக்கு ஹெலிகாப்டரை ஈடுபடுத்த போலீஸ் துறை நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2016 02:12
சபரிமலை, டிச.,6 பாதுகாப்புக்காக சபரிமலை பகுதிகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தி கண்காணிக்க போலீஸ்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிச., ஒன்றாம் தேதியான நேற்று முதல் சபரிமலையில் பாதுகாப்பு பலபடுத்தப் பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி ஒவ்வொரு நாளும், ஏழாம் தேதி வரை இந்த நடவடிக்கை மேலும் விரிவு படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக டிச., 6-ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடத்த போலீஸ் துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் கமாண்டோக்களும் இருப்பார்கள். மத்திய அரசின் சில ஏஜென்சிகள் வழங்கிய அறிவுரைபடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த தொகையை தேவசம்போர்டு வழங்க வேண்டும் என்று போலீஸ்துறை சார்பில் கேட்ட போது, பாதுகாப்பு அரசு சம்பந்தப்பட்டது எனவே அரசு செலவு செய்யட்டும் என்று கூறியதாக தெரிகிறது.
நிலக்கல்லில் ஒரு ஹெலிபேடு அமைக்கப்பட்டு விட்ட நிலையில் சன்னிதானத்தில் இரண்டு ஹெலிபேடுகள் அமைப்பது பற்றியும் ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சன்னிதானத்தில் ஏதாவது சந்தர்ப்பத்தில் அவசர நிலை ஏற்பட்டு பக்ர்களை வெளிய÷ற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், பக்தர்களை ஹெலிபேடில் சென்றடைய செய்ய தனி ரோடு அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. மருத்துவக்குழுக்களை கொண்டு இறக்கவும், பக்தர்களை மீட்டு கொண்டு செல்லவும் இது உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் மிக அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே ஹெலிகாப்டர் சன்னிதானத்தில் இறங்க அனுமதிக்கப்படும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திரா பிரதமராக இருந்த போது அவர் வருவதற்காக அப்போதைய முதல்வர் கருணாகரன் சரங்குத்தியில் ஒரு ஹெலிபேடு அமைத்தார். ஆனால் பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக இந்திராவும் வரவில்லை, இன்று வரையிலும் அந்த ஹெலிபேடு பயன்படுத்தப் படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.