பதிவு செய்த நாள்
10
அக்
2011
11:10
ராசிபுரம்:புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த மாடு தாண்டும் வினோத விழாவில், நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன்வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை விரதமிருந்து, பொன் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர். ஒவ்வொரு ஆண்டும், மூன்றாவது சனிக்கிழமை அன்று, ஒரு சமூகத்தினர் பொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்வாமிக்கு திருக்கொடி வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து, ஸ்வாமி திருவீதி உலா செல்வது வழக்கம். இந்நிகழ்ச்சி, தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் அக்குறிப்பிட்ட சமூகத்தினர், 1,000க்கும் மேற்பட்டோர் பொன் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்வாமிக்கு திருக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மாடு தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. மாடு வரும் வழியில் பக்தர்கள் கீழே படுத்துக்கொண்டு வாக்கு கேட்டனர். ஸ்வாமி மாடு, பக்தர்களை தாண்டி செல்லும்போது, அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால், வாக்கு பலிக்கும் என்பது ஐதீகம். அவ்வாறு மாடு தாண்டும் போது, கால் வாக்கு கேட்பவர் மீது பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் நின்று விட்டாலோ, தங்களது வீட்டில் ஏதாவது கெடுதல் நடக்கும் என பக்தர்கள் அஞ்சுவர்.இந்த மாடு தாண்டும் நிகழ்ச்சி, கடந்த, 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பங்காளி வகையறாக்கள் பங்கேற்றனர்.