பதிவு செய்த நாள்
05
டிச
2016
11:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 12 மாலை 6.15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும்.
திருவிழா துவக்கமாக நேற்றுமுன்தினம் மாலை கோயில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாக பூஜைகளும், விசாக கொறடு மண்டபத்தில் விஷப யாகம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். கொடிக்கம்பத்தில் சிவாச்சார்யார்கள் கார்த்திகை திருவிழாவிற்கான கொடியேற்றினர். பட்டு, மா இலை, தர்ப்பைபுல் வைத்து கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டு, கொடிக்கம்பத்தின் அடிப்பாகத்தில் பால் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
சுவாமி வீதி உலா: இன்று (டிச.5) முதல் டிச. 13 வரை தினமும் காலை சிம்மாசனம், தங்க சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, காமதேனு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா சென்று அருள்பாலிப்பர். டிச.9ல் சைவசமய ஸ்தாபித வராலாற்று லீலையும், டிச. 10 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடும், மாலை நடராஜமூர்த்தி, சிவகாமி அம்மனும், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடும், டிச. 11ல் பட்டாபிஷேகம், டிச. 12 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம், டிச. 13ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.