மஞ்சூர்: நீலகிரியில் பருவ மழை தொடர வலியுறுத்தி, கிராமங்களில் வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நீலகிரியில், நடப்பாண்டு துவக்கத்திலிருந்து எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால், தேயிலை பயிர், மலை காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டது. நீர் நிலைகள் வறண்டதால், பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சில கிராமங்களில் மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழையின் தாக்கத்தை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், நேற்று மழை பெய்யவில்லை. இதை தொடர்ந்து, பருவமழை தொடர வேண்டி, மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில், வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.