திருநெல்வேலி:நெல்லையில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.நெல்லை அருகே மேல திருவேங்கடநாதபுரத்தில் 3வது புரட்டாசி சனிக்கிழமையான நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையிலிருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.இரவு சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்கார சப்பாரத்தில் படிசேவை செய்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.அதுபோல் நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோயில், சி.என்.கிராமம் பெருமாள் கோயில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயில், பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், பாளை.,ராஜகோபால சுவாமி, ராமசாமிகோயில் உட்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.