பதிவு செய்த நாள்
10
அக்
2011
01:10
மௌலானா மஜ்ருல் ஹக் லண்டனில் வக்கீல் தொழிலுக்குப் படித்துக் கொண்டிருந்த போது அவரை எனக்குத் தெரியும். பிறகு 1915-இல் காங்கிரஸில் அவரைச் சந்தித்தேன். அந்த ஆண்டு அவர் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தார். அப்பொழுது மீண்டும் பழக்கம் ஏற்பட்டபோது, நான் பாட்னாவுக்கு எப்பொழுதாவது வந்தால் தம்முடன் தங்குமாறு அவர் அழைத்திருந்தார். இப்பொழுது அது எனக்கு ஞாபகம் வந்தது. நான் வந்திருக்கும் நோக்கத்தை அறிவித்து அவருக்கு ஒரு சீட்டு அனுப்பினேன். உடனே அவர் தமது மோட்டாரில் வந்து, தம்முடன் வந்து தங்குமாறு வற்புறுத்தினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு நான் போக வேண்டிய இடத்திற்குப் புறப்படும் முதல் வண்டியிலேயே என்னை அனுப்பும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன். அவ்விடத்திற்கு என்னைப் போன்று முற்றும் புதிதான ஒருவரால் ரெயில்வே வழி காட்டியைக்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, ராஜ்குமார் சுக்லாவுடன் பேசினார். நான் முஜாபர்பூருக்கு முதலில் போக வேண்டுமென்று யோசனை கூறினார். அங்கே போக அன்று மாலையிலேயே ஒரு வண்டி இருந்தது. அதில் அவர் என்னை ஏற்றி அனுப்பினார். பிரின்ஸிபால் கிருபளானி அப்பொழுது முஜாபர்பூரில் இருந்தார்.
ஹைதராபாத்திற்கு (சிந்து) நான் போயிருந்த போதிலிருந்து அவரை நான் அறிவேன். அவருடைய பெரும் தியாகங்களைக் குறித்தும் எளிய வாழ்க்கையைப் பற்றியும், பேராசிரியர் கிருபளானி அளித்து வரும் நிதியைக்கொண்டு தாம் ஆசிரமம் நடத்தி வருவதைப் பற்றியும் டாக்டர் சோயித்ராம் என்னிடம் கூறியிருந்தார். கிருபளானி, முஜாபர்பூர் அரசாங்கக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். நான் அங்கே போவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் அவர் அந்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்து விட்டார். நான் அங்கே வருவது குறித்து அவருக்குத் தந்தி மூலம் அறிவித்திருந்தேன். ரெயில், நடுநிசியில் அங்கு போனபோதிலும் ஒரு மாணவர் கூட்டத்துடன் வந்து அவர் என்னை ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தார். அவருக்குச் சொந்த ஜாகை எதுவும் இல்லை. போராசிரியர் மல்கானியுடன் அவர் வசித்து வந்தார். ஆகையால் நானும் மல்கானியின் விருந்தினன் ஆனேன். என்னைப் போன்ற ஒருவனுக்கு, அரசாங்கத்தில் வேலை பார்க்கு பேராசிரியர் ஒருவர் இடம் கொடுத்து உபசரிப்பது என்பது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வமான விஷயமாகும்.
பீகாரில் முக்கியமாக திர்ஹூத் பகுதியில் இருந்துவந்த சகிக்க முடியாத மோசமான நிலைமையைக் குறித்துப் பேராசிரியர் கிருபளானி எனக்கு விவரமாகக் கூறினார். நான் மேற்கொண்டிருக்கும் வேலை எவ்வளவு கஷ்டமானது என்பதையும் தெரிவித்தார். அவர் பீகாரிகளுடன் நெருங்கிப் பழகி நல்ல தொடர்பு வைத்திருந்தார். நான் பீகாருக்கு வந்திருக்கும் வேலையைக் குறித்து முன்னாடியே அவர்களுடன் பேசியும் இருந்தார். காலையில் சில வக்கீல்கள் சேர்ந்து என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் ஒருவரான ராமநவமிப் பிரசாத்தை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. முக்கியமாக அவர் கொண்டிருந்த சிரத்தை என் மனத்தைக் கவர்ந்தது. நீங்கள் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதை நீங்கள் இங்கே (பேராசிரியர் மல்கானியின் வீட்டில்) தங்கினால் செய்யவே முடியாது, நீங்கள் எங்களில் யாராவது ஒருவருடன் வந்து தங்க வேண்டும். கயா பாபு இங்கே பிரபலமான வக்கீல். அவருடன் நீங்கள் வந்து தங்க வேண்டும் என்று அவர் சார்பாக உங்களை அழைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும் அரசாங்கத்திடம் பயப்படுகிறவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என்றாலும், எங்களாலான உதவியை நாங்கள் செய்வோம். ராஜ்குமார் சுக்லா உங்களிடம் கூறியவை பெரும்பாலும் உண்மையே.
எங்கள் தலைவர்கள் இன்று இங்கே இல்லாது போனது வருந்தத்தக்கது. ஆயினும், பாபு பிரஸ்கி÷ஷார் பிரசாத், பாபு ராஜேந்திரப் பிரசாத் ஆகிய இருவருக்கும் தந்தி கொடுத்திருக்கிறேன். அவர்கள் சீக்கிரத்திலேயே இங்கே வந்து உங்களுக்குத் தேவையான தகவல்களையெல்லாம் கூறுவதோடு அதிக அளவு உதவியும் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். தயவு செய்து கயா பாபுவின் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறி ராமநவமிப் பிரசாத் அழைத்தார். கயா பாபுவுக்குத் தொந்தரவு கொடுப்பானேன் என்று அஞ்சி நான் தயங்கிய போதிலும் இந்த வேண்டுகோளை என்னால் மறுக்க முடிய வில்லை. ஆனால், அப்படி ஒன்றும் தொந்தரவு இல்லை என்று அவர் கூறியதன் பேரில் அவருடன் இருக்கப் போனேன். அவரும் அவருடைய வீட்டினரும் என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டினர். தர்பங்காவிலிருந்து பிரஜ்கி÷ஷார் பாபுவும், பூரியிலிருந்து ராஜேந்திர பாபுவும் இதற்குள் வந்து சேர்ந்துவிட்டனர். லட்சுமணபுரியில் நான் சந்தித்த பாபு பிரஜ்கி÷ஷார் பிரசாத் அல்ல, இந்தப் பிரஜ்கி÷ஷார் பாபு. இத் தடவை பீகாரிகளுக்கு இயற்கையாக உள்ள அடக்கம், எளிமை, நல்ல தன்மை, அளவு கடந்த நம்பிக்கை ஆகியவைகளை அவரிடம் கண்டேன். இவைகள் என்னைக் கவர்ந்ததால், என் உள்ளம் அதிக ஆனந்தமடைந்தது.
பீகார் வக்கீல்கள் அவரிடம் கொண்டிருந்த மதிப்பு, எனக்கு ஓரளவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. இந்த நண்பர்களின் கூட்டத்தோடு ஆயுள் முழுவதற்கும் நட்புத்தளையில் நான் பிணைக்கப்பட்டு வருவதாகச் சீக்கிரத்திலேயே நான் உணர்ந்தேன். அங்கிருந்த நிலைமையைக் குறித்து எல்லா விவரங்களையும் பிரஜ்கி÷ஷார் பாபு எனக்குக் கூறினார். ஏழை விவசாயிகளின் வழக்குகளை அவர் நடத்துவது வழக்கம் என்றும் அறிந்தேன். நான் அங்கே சென்ற போது, அத்தகைய வழக்குகளில் இரண்டு கோர்ட்டில் விசாரணையில் இருந்தன. அப்படிப்பட்ட வழக்குகளில் அவர் வெற்றி பெற்றுவிட்டால், அந்த ஏழை மக்களுக்குத் தாம் ஏதோ கொஞ்சம் உதவி செய்ததாக எண்ணி அவர் ஆறுதல் அடைவாராம். ஒன்றும் தெரியாத அந்த விவசாயிகளிடம் அவர் கட்டணம் வாங்காமல் இல்லை. வழக்குகளுக்குப் பணம் வாங்காவிட்டால், தாங்கள் குடும்பத்தை நடத்த முடியாது என்றும், அதனால் ஏழைகளுக்குச் சரியானபடி தாங்கள் உதவி செய்ய முடியாது போகும் என்றும் பொதுவாக வக்கீல்கள் எண்ணி வந்தனர். வழக்குகளுக்கு இவர்கள் வாங்கி வந்த கட்டணத் தொகையும், வங்காளத்திலும் பீகாரிலும் பாரிஸ்டர்கள் வாங்கி வந்த கட்டணங்களும் என்னைத் திகைக்கும் படி செய்துவிட்டன.
இன்னாரின் அபிப்பிராயத்தைக் கேட்பதற்காக அவருக்கு ரூ.10,000 கொடுத்தோம் என்று என்னிடம் சொன்னார்கள். யாருக்கும் ஆயிரத்திற்குக் குறைவான தொகையே இல்லை. இதைக் குறித்து நான் அன்புடன் கண்டித்துப் பேசியதை அந்நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். என்னைத் தவறாக அவர்கள் எண்ணிக் கொண்டுவிடவில்லை. அவர்களிடம் நான் கூறியதாவது: நிலைமையை நான் அறிந்துகொண்டதிலிருந்து கோர்ட்டுகளுக்குப் போவது என்பதை நாம் நிறுத்திக்கொண்டுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இத்தகைய வழக்குகளைக் கோர்ட்டுக்குக் கொண்டு போவதால், எந்தவிதமான நன்மையும் இல்லை. விவசாயிகள் இவ்விதம் நசுக்கப்பட்டுப் பயமடைந்திருக்கும் போது, கோர்ட்டுகள் பயனற்றவை. அவர்களுக்கு உண்மையான பரிகாரம், பயத்திலிருந்து அவர்களை விடுவிப்பதே. தீன் கதியா முறையைப் பீகாரிலிருந்து விரட்டியடித்துவிடும் வரையில் நாம் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. இரண்டு நாட்களில் இங்கிருந்து புறப்பட்டுவிட முடியும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், இந்த வேலையை முடிக்க இரண்டு ஆண்டுகளும் ஆகக்கூடும் என்பதை இப்பொழுது நான் அறிகிறேன். அவசியமானால், அவ்வளவு காலம் இருக்கவும் நான் தயாராயிருக்கிறேன்.
நான் செய்ய வேண்டியிருக்கும் வேலை இன்னதென்பதை இப்பொழுது உணருகிறேன். ஆனால், உங்கள் உதவி எனக்கு வேண்டும். பிரஜ்கி÷ஷார் பாபு, இணையற்ற வகையில் நிதானத்துடன் இருந்ததைக் கண்டேன். அவர் அமைதியோடு, எங்களால் முடிந்த உதவிகளையெல்லாம் நாங்கள் செய்கிறோம். ஆனால், உங்களுக்கு எந்தவிதமான உதவி தேவை என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள் என்றார். இவ்வாறு நடுநிசி வரையில் உட்கார்ந்து பேசினோம். நான் அவர்களிடம் கூறியதாவது: உங்களுடைய சட்ட ஞானத்தால் எனக்கு ஒருவிதப் பிரயோசனமும் இல்லை. எழுத்து வேலைக்கும், மொழி பெயர்க்கும் வேலைக்குமே எனக்கு உதவி தேவை; சிறை செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அந்த அபாயத்திற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புவேன். ஆனால், எவ்வளவு தூரம் போகமுடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ
அந்த அளவுக்கு மாத்திரம் நீங்கள் போகலாம். நீங்கள் குமாஸ்தாக்கள் ஆகிவிடுவதும், நிச்சயமற்ற காலம் வரையில் தொழிலை விட்டுவிட வருவதும் சாமான்யமான விஷயமே அல்ல. இப் பகுதியில் பேசப்படும் ஹிந்தியைப் புரிந்து கொள்வது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. செய்தி அல்லது உருது மொழிப் பத்திரிகைகளையும் என்னால் படிக்க முடியாது. இவற்றை மொழிபெயர்த்து எனக்குச் சொல்ல உங்கள் உதவி வேண்டியிருக்கும். இந்த வேலைக்குச் சம்பளம் கொடுத்து ஆள் வைக்க நம்மால் ஆகாது. அன்பிற்காகவும், சேவை உணர்ச்சியின் பேரிலுமே இவைகளெல்லாம் செய்யப்படவேண்டும்.
பிரஜ்கி÷ஷார் பாபு நான் கூறியதை உடனே நன்கு அறிந்து கொண்டார். இப்பொழுது அவர் என்னையும் தமது சகாக்களையும் முறையாகக் கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். தங்கள் சேவை எவ்வளவு காலத்திற்கு வேண்டியிருக்கும், தங்களில் எத்தனை பேர் வேலைக்கு வேண்டும். தாங்கள் முறை போட்டுக் கொண்டு வந்து சேவை செய்யலாமா என்பன போன்ற கேள்விகளையெல்லாம் அவர் கேட்டார். அவற்றின் மூலம் நான் கேட்ட உதவியின் தன்மையைத் தெளிவாக்கிக்கொள்ள முயன்றார். பிறகு தியாகத்திற்குத் தங்களுக்குள்ள சக்தியைக் குறித்து வக்கீல்களைக் கேட்டார். முடிவாக அவர்கள் எனக்கு இந்த வாக்குறுதியை அளித்தார்கள்: எங்களில் இத்தனை பேர் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களில் சிலர், நீங்கள் விரும்பும் காலம் வரையில் உங்களுடனேயே இருப்போம். ஆனால், சிறை செல்வதற்குத் தயாராவது என்பது எங்களுக்குப் புதியதொரு விஷயம். அதற்கும் எங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள முயல்கிறோம்.