பதிவு செய்த நாள்
12
டிச
2016
11:12
கீழக்கரை: சேதுக்கரை கடற்கரையில் சங்கல்ப பூஜைகள் செய்வதற்காக வரும் பக்தர்கள் நீராட வசதியாக சுத்தமான தண்ணீர் வசதியுடன் குளியலறைகள் அமைக்க வேண்டும். ராமபிரானிடம், விபீஷணன் சரணாகதி அடைந்த புண்ணிய ஸ்தலமாகவும், இலங்கைக்கு ராமர் பாலம் அமைய வழிவகுத்த வரலாற்று சிறப்புமிக்க பகுதியாகவும் சேதுக்கரை திகழ்கிறது. திருப்புல்லாணியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள சேதுக்கரைக்கு ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், சங்கல்ப பூஜை, தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்வதற்கும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இவர்கள் சங்கல்ப பூஜைகள் செய்வதற்கு முன்பு சுத்தமான தண்ணீரில் குளிப்பதும், பூஜைகள் செய்த பின்னர் கடலில் இறங்கி புனித நீராடுவதும் வழக்கம்.
ஆனால் குளிப்பதற்கு சுத்தமான தண்ணீர் வசதி இல்லாததால் கடலில் இறங்கி நீராடிய பின்னர் சங்கல்ப பூஜைகள் செய்கின்றனர். இவை பாவத்தை போக்குவதற்கு பதில் வாங்கி சுமக்கின்ற பரிதாபத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலை மாற சேதுக்கரை கடற்கரையில் பக்தர்கள் குளிக்க வசதியாக தண்ணீர் வசதியுடன் ஆண், பெண் என தனித்தனியே குளியல் அறைகள் அமைக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து ராமநாதபுரம் ராம பக்த சபா தலைவர் எஸ்.நாராயணன் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சேதுக்கரை கடலில் குளிப்பதற்கு முன்பு, அருகில் உள்ள ராயர்மடம் சத்திரத்திற்கு சென்று கிணற்று நீரில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு காரியங்கள் செய்வார்கள். அதன் பின்னரே கடலில் இறங்கி புனித நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். வேதங்கள், உபநிடங்களில் குறிப்பிட்டுள்ளது போல் கடல் துாய்மையானது என்பதால் முன்னோர் கள் இந்த நடைமுறையை பின்பற்றி வந்தனர். சத்திரங்கள், கிணறுகள் சிதிலமடைந்ததால் இந்த பழக்கம் நாளடைவில் மறைந்துவிட்டது. இதனால் பாவ விமோசனம் பெறுவதற்காக சேதுக்கரை வரும் பக்தர்கள் பாவத்தை பெற்றுச்செல்லும் நிலை உள்ளது. எனவே சேதுக்கரை கடற்கரையில் பக்தர்கள் நீராட வசதியாக சுத்தமான தண்ணீருடன் குளியல் அறைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.