பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று (டிச. 12) மாலை 6:15 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் தேரோட்டம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச. 4ல் துவங்கிய கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு பட்டாபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல், சுவாமியின் பிரதிநியான திருவிழா நம்பியார் சிவாச்சார்யாரிடம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தங்கக் குடத்தில் புனிதநீர் நிரப்பி வைத்து பூஜைகளுக்குப்பின், சுவாமியின் கிரீடத்திற்கு அபிஷேகம் முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்தப்படி செய்யப்பட்டது. கரங்களில் செங்கோல், சேவல், மயில் கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன. இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. காலை 7:00 மணிக்கு 16கால் மண்டபம் முன் உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு கோயிலுக்குள் பால தீபம், மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். நாளை தீர்த்த உற்சவம் நடக்கிறது. நாளைவரை பொதுமக்கள் மலைக்கு செல்ல போலீசார் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்கள் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், குதிரை சுனை, தீபத்துாண், தர்ஹாவில் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.