பதிவு செய்த நாள்
10
அக்
2011
03:10
சம்பாரண், இந்தியாவில் தொலைவான ஒரு முடுக்கில் இருக்கிறது. அங்கே நடந்த போராட்டத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் ஆகவில்லை. அதனால், வெளியிலிருந்து அங்கே அதிகம் பேர் வரவில்லை. ஆனால், கேடாப் போராட்டம் அப்படியல்ல. அங்கே நடந்துவந்தவை யாவும் அன்றாடம் பத்திரிகைகளில் வெளியாகி வந்தன. குஜராத்திகளுக்கு இப்போராட்டம் முற்றிலும் புதியதான ஒரு சோதனை. ஆகையால், அவர்கள் இதில் அதிக சிரத்தை கொண்டிருந்தனர். இந்த லட்சியம் வெற்றியடைவதற்காகத் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்ட அவர்கள் தயாராயிருந்தார்கள். சத்தியாக்கிரகத்தைப் பணத்தினால் மாத்திரமே நடத்திவிட முடியாது என்பதை அவர்கள் சுலபமாக அறிந்து கொள்ள முடியவில்லை. சத்தியாக்கிரகத்திற்குத் தேவையானவற்றில் பணம், கடைசி ஸ்தானத்தையே வகிக்கிறது. வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்த்தகர்கள் எங்களுக்கு அவசியமானதற்கும் அதிகமாகப் பணம் அனுப்பினார்கள். இதனால் அப்போராட்டத்தின் முடிவில் எங்களிடம் கொஞ்சம் பணம் மீதமாக இருந்தது. அதே சமயத்தில் சத்தியாக்கிரகத் தொண்டர்கள், புதிய பாடமான எளிமையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
அவர்கள் அப்பாடத்தை முழுவதும் கற்றுக் கொண்டுவிட்டனர் என்று சொல்ல முடியாது. என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றிக் கொண்டார்கள். செய்யவேண்டியிருந்த முக்கியமான காரியம், விவசாயிகளின் பயத்தைப் போக்குவது. அதிகாரிகள், வரி செலுத்துவோர் கொடுக்கும் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அவர்கள் மக்களின் சேவகர்களே அன்றி மக்களுக்கு எஜமானர்கள் அல்ல என்பதை விவசாயிகள் உணரும்படி செய்து அவர்கள் பயத்தைப் போக்க வேண்டியிருந்தது. அஞ்சாமை என்பதை அவர்கள் உணரும்படி செய்வது அசாத்தியமான காரியமாகவே இருந்தது. அதிகாரிகளிடம் அவர்களுக்கு இருந்த பயம் போய்விட்டபிறகு, பதிலுக்குப் பதில் அதிகாரிகளை அவர்கள் அவமதிக்காமல் இருக்கும்படி செய்வது எப்படி? மேலும், மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள முற்பட்டு விடுவார்களாயின், பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்துவிட்டதைப் போன்று சத்தியாக்கிரகம் கெட்டுவிடும். மரியாதையாக நடந்துகொள்ளும் பாடத்தை, நான் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதை நான் பின்னால் அறிந்தேன்.
பிறரிடம் மரியாதையாக நடப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் மிகக் கடுமையான பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது. மரியாதையாக நடப்பது என்பதற்கு, அச்சமயத்திற்கு ஏற்பப் பழகி வைத்துக்கொள்ளும் நயமான வெளிப் பேச்சு என்பதல்ல, இங்கே பொருள். பெருந்தன்மை, மனப்பூர்வமாக ஏற்பட்டதாக இருப்பதோடு எதிரிக்கும் நல்லதைச் செய்யும் விருப்பமும் இருக்க வேண்டும். சத்தியாக்கிரகியின் ஒவ்வொரு செயலிலும் இது வெளிப்படுவதாகவும் இருக்க வேண்டும். ஆரம்பக் கட்டங்களில் மக்கள் அதிகத் தைரியம் காட்டினார் களெனினும், கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொள்ள அரசாங்கம் விரும்பியதாகத் தோன்றவில்லை. ஆனால், மக்களின் உறுதி தளர்ந்துவிடும் என்பதற்கான அறிகுறி எதுவும் தோன்றாது போகவே அரசாங்கம் அடக்கு முறையைக் கைக்கொள்ளக் கிளம்பியது. ஜப்தி அதிகாரிகள், மக்களின் கால்நடைகளை ஏலம் போட்டனர். அகப்பட்ட ஜங்கம சொத்துக்களையெல்லாம் ஜப்தி செய்தார்கள்; அபராத அறிவிப்புக்களைப் பிறப்பித்தனர்; சிலருடைய மகசூல்களையும் ஜப்தி செய்தார்கள். இவையெல்லாம் விவசாயிகளின் உறுதியைக் குலைத்துவிட்டன.
சிலர் தங்கள் வரிப்பாக்கியைச் செலுத்திவிட்டார்கள். மற்றும் சிலரோ, தங்கள் வரிப்பாக்கிக்காக ஜப்தி செய்துகொண்டு போகட்டும் என்று, பத்திரமான தங்கள் ஜங்கம சொத்துகள் - அதிகாரிகள் கையில் அகப்படும் வகையில் வைத்துவிட விரும்பினார்கள். ஆனால், இதற்கு மாறாக மற்றும் சிலரோ, கடைசி வரையில் போராடியே தீருவது என்று உறுதியுடன் இருந்தார்கள். இப்படி எல்லாம் நடந்துகொண்டிருந்த சமயம், ஸ்ரீ சங்கரலால் பரீக்கின் சாகுபடியாளர்களில் ஒருவர் தம்மிடமிருந்த நிலத்திற்குரிய தீர்வையைச் செலுத்திவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமது சாகுபடியாளர் செய்துவிட்ட தவறுக்கு ஸ்ரீ சங்கரலால் பரீக் உடனே தக்க பரிகாரம் செய்துவிட்டார். எந்த நிலத்திற்கு வரி செலுத்தப் பட்டுவிட்டதோ அந்த நிலத்தை அவர் தருமத்திற்குக் கொடுத்துவிட்டார். இவ்விதம் அவர் தமது கௌரவத்தைக் காத்துக்கொண்டதோடு மற்றவர்களுக்கும் சிறந்த உதாரணமானார். பயமடைந்துவிட்டவர்களின் உள்ளத்தில் உறுதி ஏற்படும்படி செய்வதற்காக, ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவின் தலைமையிலிருந்த மக்களுக்கு நான் ஒரு யோசனை கூறினேன்.
ஒரு நிலத்தில் மகசூல் நியாயமின்றி ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அந்த வயலிலிருந்த வெங்காய மகசூலை அப்புறப் படுத்திவிடும்படி கூறினேன். இதைச் சாத்வீகச் சட்டமறுப்பு என்று நான் கருதவில்லை. இது சாத்விகச் சட்டமறுப்பாகவே இருந்தாலும், நிலத்தில் இருக்கும் மகசூலை ஜப்தி செய்வது சட்டப்படி சரியானதாகவே இருப்பினும், ஒழுக்க ரீதியில் அது தவறானது; கொள்ளையைத் தவிர வேறு எதுவும் அல்ல அது என்று நான் கூறினேன். ஆகையால், ஜப்தி உத்தரவு இருந்தாலும், அந்த நிலத்திலிருந்து வெங்காய மகசூலை அப்புறப்படுத்திவிட வேண்டியது மக்கள் கடமை என்றேன். அபராதம் விதிக்கப்பட்டது அல்லது தண்டனை அடைவது என்பது இத்தகைய சட்ட மறுப்பின் அவசியமான பின்விளைவாகும். ஆகையால், அபராதம் விதிக்கப்படுவது அல்லது தண்டனையை அடைவது என்பதன் மூலம் புதியதொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு மக்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கோ இது மனத்திற்குப் பிடித்த காரியம். சத்தியாக்கிரகக் கொள்கைக்குப் பொருத்தமான வகையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைச் செய்து சிறைவாச உருவில் துன்பத்தை அனுபவிக்காமல் இப்போராட்டம் முடிந்து விடுவதை அவர் விரும்பவில்லை. ஆகையால், அந்நிலத்திலிருந்த வெங்காய மகசூலைத் தாமே அப்புறப்படுத்தி விடுவதாக அவர் முன் வந்தார். இதில் ற்றும் ஏழு, எட்டு நண்பர்களும் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.
இவர்களைச் சும்மா விட்டுவிடுவது என்பது அரசாங்கத்தினால் முடியாத காரியம். ஸ்ரீ மோகன்லாலும் அவருடைய சகாக்களும் கைதானதால் மக்களின் உற்சாகம் அதிகமாயிற்று. ஜெயிலுக்குப் பயப்படுவதென்பது போய்விட்ட பிறகு அடக்கமுறை மக்களுக்குத் தைரியத்தை ஊட்டிவிடுகிறது. விசாரணை நாளன்று கோர்ட்டில் ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். பாண்டியாவும் அவருடைய சகாக்களும் சொற்ப காலச் சிறைத் தண்டனை அடைந்தார்கள். தண்டனை விதித்தது தவறு என்பது என் அபிப்பிராயம். ஏனெனில், வெங்காய மகசூலை அப்புறப்படுத்தியது குற்றச் சட்டத்தின்படி திருட்டு ஆகாது. ஆனால், கோர்ட்டுக்குப் போவதைத் தவிர்ப்பது என்பதே கொள்கையாகையால் அப்பீல் செய்யவில்லை. கைதிகளைச் சிறைக்குக் கொண்டுபோனபோது, அவர்கள் முன்னால் மக்கள் ஊர்வலம் ஒன்றும் சென்றது. அன்று மக்கள் ஸ்ரீ மோகன்லாலுக்கு வெங்காயத் திருடர் என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தனர். இன்னும் அப்பட்டப்பெயர் அவருக்கு இருந்து வருகிறது. கேடாச் சத்தியாக்கிரகத்தின் முடிவை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.