பதிவு செய்த நாள்
14
டிச
2016
04:12
தர்மஸ்ய சாசனம் கரோதி
இதி தர்ம சாஸ்தா:
சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர், மேலும் தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். முருகப் பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளை இட்டவர். வீரபத்ரரை தக்ஷ சாஸ்தா என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார். ஹரிஹர புத்திரனை தர்ம சாஸ்தா என்று அமைக்கக் காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார்.
தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மம் சர என்று வேதம் கூறுகிறது. தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது எல்லா நல்ல செயல்களும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார். எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று இந்த தர்மத்தால் தான், இன்று அகிலம் தழைத்து நிற்கிறது.
ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்விகமானவனாக்குகிறது. நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்விகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம்.