பதிவு செய்த நாள்
15
டிச
2016 
11:12
 
 அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, வேத மந்திரங்கள் முழங்க, திருக்கோடி ஏற்றப்பட்டு, அக்னி ரூபமாக இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தன. கோவில் தீபஸ்தம்பம் முன், ரிஷப வாகனத்தில், அம்மையப்பர் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "ஓம் நமசிவாயா கோஷம் முழங்க, தீபஸ்தம்பத்தில் திருக்கோடி ஏற்றப்பட்டது. திருக்கோடியிருலிருந்து ஜோதி எடுத்து வந்து, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து, சுவாமி திருவீதி உலா நடந்தது. காசிவிஸ்வநாதர், காசி விநாயகர், அங்காளபரமேஸ்வரி, செல்லாண்டி யம்மன் கோவில் களிலும், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், சபா மண்டபத்தில், லிங்க வடிவில், 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை சோழீஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பெருமாள் கோவில்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, கோவில் கொடி மரம் முன்பு, பெரிய அளவிலான, கார்த் திகை தீபம் ஏற்றப்பட்டு, ஆஞ்சநேயர் மற்றும் சுவாமிகளின் சன்னதிகளில், அகல் விளக்கு ஏற்றப் பட்டது. பின்னர், சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, ஜோதி ரூபமாக எழுந்தருளிய இறைவனை வழிபட்டனர். அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலிலும், கார்த்திகை தீபம் ஏற்பட்டது.