பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
வாழப்பாடி: நீர்மூழ்கிகுட்டை கிராமத்தில், ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தின் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், ஓமலூர் சீனிவாசன், டாக்டர் பொன்னம்பலம் உள்ளிட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள் குழுவினர், வாழப்பாடி அருகே, நீர் மூழ்கிகுட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விவசாயி மாரிமுத்து என்பவரது தோட்டத்தில், ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தின் வட்டெழுத்துடன் கூடிய ஓர் நடுகல்(வீரக்கல்) கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, தேடல் குழு ஆய்வாளர்கள் கூறியதாவது: தென்திசை நோக்கி உள்ள நடுகல், மூன்றே கால் அடி உயரம் மற்றும் அகலத்துடன் உள்ளது. அதன் மேற்புறம் ஆறு வரிகளில், 85 வட்டெழுத்துக்கள் உள்ளன. ஒரு அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள இடத்தில் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. எழுத்துக்களின் கீழ், வீரனின் உருவம், சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது கையில் குறுவாள், இடது கையில் வில் காணப்படுகிறது. தலைப்பகுதியில் கொண்டை, காதணியாக பத்தரகுண்டலம், இடுப்பில் குறுவாள், வலதுபக்க மேற்பகுதியில் சிமிழி, கீழ் பகுதியில் கெண்டி உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்கள் வலுவிழந்தபோது, ஆங்காங்கே குறுநில மன்னர்கள் வலிமை பெற்று சிறு, சிறு பகுதிகளை ஆண்டு வந்தனர். பெரிய பேரரசுகள் ஏதும் உருவாகாத காலகட்டத்தில், இந்த நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதால், ஆட்சி காலம் பற்றிய குறிப்பு இல்லை. அந்த காலகட்டத்தில், ஆத்தூரை ராமாடிகள் என்பவர் ஆட்சிபுரிந்துள்ளார். அப்போது, அவரது மகன் பெருமான் என்பவர், பூலாம்பாடி என்ற ஊரின் மீது படையெடுத்து சென்றுள்ளார். பூலாம்பாடி என்பது, தற்போது பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே உள்ள ஊராக இருக்கலாம். படையெடுப்பில், பிள்ளைப்பாடி எனும் ஊரை சேர்ந்த பாராவன்னார் என்பவரது மகன் பொன்ன குன்றி, வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி, வட்டெழுத்து கல்வெட்டில் உள்ளது. ராமாடிகள் என்ற குறுநில மன்னரின் வம்சம், ஆத்தூரை ஆட்சி செய்துள்ளதாக கிடைத்த தகவல், தமிழக வரலாற்றுக்கு ஒரு புதிய செய்தி. இவ்வாறு அவர்கள் கூறினர்.