தமிழில் படைக்கப்பட்ட ஆதி இலக்கிய படைப்புகளில் முக்கியமானது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆகும். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இந்த சிலப்பதிகாரத்தின் முதன்மை பாத்திரமான கண்ணகி பெண்டீர் குலத்தின் திலகமாக இராயிரம் வருடங்கள் கழித்து இன்றும் போற்றப்படுகிறாள். மாட்சிமை தாங்கிய பெண்ணின் கோபம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று சொல்லிய இக்காப்பியம் தமிழின் தவிர்க்க முடியாத படைப்புகளில் ஒன்றாகும். இக்காப்பியத்தின் படி தவறான நீதியின் காரணமாக கணவனை இழந்த கண்ணகி மதுரை மாநகரை எரித்து விடுவாள்.ஆனால் அதற்கு பிறகு கண்ணகி என்ன ஆனாள் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது.
கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயில் உலகத்தில் இருக்கும் பத்ர காளி அம்மன் கோயில்களிலேயே மிகவும் உக்கிரமான ரூபங்களில் இருக்கும் இடமாக கொடுங்கல்லூர் கோயில் சொல்லப்படுகிறது. இங்கே எட்டு கரங்களுடன் அதி உட்கிரமாக அருள்பாலிக்கிறார் கொடுங்கல்லூர் பகவதி அம்மன். மதுரையை எரித்த பிறகு உக்கிர கோலத்தில் கண்ணகி இந்த கோயிலுக்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டிருக்கிறாள். அதன் பயனாக கண்ணகியை தன்னுள் இழுத்துக்கொண்டு அவருக்கு முக்தி வழங்கியதாக இங்குள்ள தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கண்ணகி முக்தி அடைந்த இடம் என்பதை தாண்டி முப்பெரும் தமிழ் மன்னாரில் ஒருவரான சேரர்களின் ஆட்சி காலத்தின் போது மகோதயாபுரம் என இவ்விடம் அழைக்கப்பட்டு சேர ஆட்சியின் தலைமை பீடமாகவும் திகழ்ந்திருக்கிறது. இக்கோயிலை பற்றி சொல்லப்படும் மற்றொரு கதைப்படி விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை ‘தருகா’ என்ற அரக்கன் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க சிவனை நோக்கி வணங்கியதாகவும் அதன் பயனாக பார்வதி தேவி பத்ர காளியாக வந்து அசுரனை அழித்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. கொடுங்கல்லூர் பரணி மற்றும் தலப்போலி என்ற முக்கியமான திருவிழாக்கள் இந்த பகவதி கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாக்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் திரண்டு பகவதி அம்மனை வழிபடுகின்றனர்.