காஞ்சிபுரம்: ’வர்தா’ புயல் கோர தாக்குதலில் பல ஆண்டுகள் பழமையான இளையனார் வேலுாரில் இருந்த அரச மரம் விழுந்தது. பல ஊர் மக்கள் வெயிலுக்கு இளைப்பாறிய மரம் விழுந்ததில் அந்த கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை தற்போது தான் அந்த ஊர் மக்கள் உணர்ந்து உள்ளனர்.
வேரோடு சாய்ந்தன: கடந்த திங்கள் கிழமை வீசிய புயல் காற்றில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அதன் வேகம் இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் மரங்கள் சாலை மற்றும் ஆட்கள் இல்லாத இடங்களில் விழுந்து உள்ளதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் மரங்கள் விழுந்ததில் மக்கள் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுார் பகுதியில் சிறப்பு பெற்று விளங்கும் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் எதிரில், 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரச மரம் இருந்தது. இந்த மரம், வர்தா புயல் காற்றுக்கு வேரோடு சாய்ந்தது. அதன் அருகில் இருந்த கோவில் தேர் மீது விழுந்து உள்ளது. இதனால் தேர் பாதுகாப்பு கூரை சேதம் அடைந்தது உள்ளது. வெயில் காலத்தில்: மேலும், அந்த கோவில் உற்சவத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு வெயில் காலத்தில் அடைக்கலம் கொடுத்த மரம் விழுந்ததில் அப்பகுதிவாசிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போல் மரம் வளர்ந்து பார்ப்பதற்கு இன்னும், 50 ஆண்டு காலம் ஆகும் என, அப்பகுதிவாசிகள் வருத்ததுடன் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மரத்தடியில் பொங்கல் வைப்பர். கூட்ட நேரத்தில் இந்த மரங்கள் தான் அடைக்கலம் கொடுத்தது என்றனர்.