பாவத்தின் சம்பளம் மரணம்.... இந்த வசனம் ஒரு நாத்திகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய கதை தெரியுமா? இங்கிலாந்தில் சார்லஸ் பின்னி என்பவர் நாத்திகவாதக் கருத்துக்களில் நாட்டம் கொண்டிருந்தார். நாத்திகம் பற்றி உரையாட, இவருடன் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி புகழ் பெற நினைத்த பின்னி, பைபிளில் வேண்டுமென்றே குறைகளைக் கண்டுபிடித்து, மக்களிடையே சொல்ல வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டார். பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால், சில நாட்களிலேயே அவரது மனதில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். நாத்திகக் கருத்துக்களில் இருந்து வழுவுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. குறிப்பாக பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வரிகள் அவரது நெஞ்சைத் தொட்டன.“ஆம்...நான் ஒரு பாவி! இயேசுவை நான் விசுவாசிக்காமல் இருந்துவிட்டேன், அவர் பட்டபாடுகள் எத்தனை! ரத்தம் வழிய சிலுவையில் அவர் தொங்கியது யாருக்காக... நம்மைப் போன்ற பாவிகளுக்காகத் தானே” என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நாத்திகத்தை விட்டார். சுவிசேஷகர் ஆகிவிட்டார். 18ம் நுாற்றாண்டின் தலைசிறந்த சுவிசேஷகராக விளங்கினார். நாமும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் பாவங்களில் இருந்து விடுதலை பெற முயற்சிப்போம்.