கோயிலில் கருவறையில் தங்கிய கருடன்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2011 11:10
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் அருகே வெயிலுமுத்தன்பட்டி கிராமத்தில் உள்ள அய்யா கோயிலில் சுமார் 8 நாட்களாக கோயில் கருவறையில் கருடன் ஒன்று வந்து தங்கியிருப்பது பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்புஅய்யா வழி அன்பர்களால் வெயிலுமுத்தன்பட்டியில் அய்யா கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் இருக்கும் சுவாமி அய்யா நாராயணர் அவதாரமாக கருதப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறார். இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை நடக்கும் திருவிழாவின்போது அன்னதானம், சப்பரத்தில் பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். மார்கழி மாதத்தில் அகிலத்திரட்டு எனும் திருஏடு வாசிப்பு நடக்கும். அய்யா கோயிலில் குடி கொண்டிருக்கும் நாராயணராகிய வைகுண்டர் திருவிழாவின் போது கருட வாகனத்தில் பவனி வருவார். இந்நிலையில் கடந்த சுமார் 11 நாட்களுக்கு முன் கருடன் ஒன்று கோயில் வளாகத்தில் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. இப்படி வலம் வந்த கருடன் 8 நாட்களுக்கு முன் கோயில் உள்ள கருவறைக்குள் சென்றது. ஆரம்பத்தில் ஏதோ கருடன் உள்ளே சென்றது வெளியில் அதுவாக போய்விடும் என்று பக்தர்கள் எண்ணினர். ஆனால் உள்ளே சென்ற கருடன் அங்கேயே தங்கியிருந்தது பக்தர்களை பரவசம் அடைய செய்தது. இத்தகவல் பரவலாக பரவியதால் அருகில் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் வெயிலுமுத்தன்பட்டி அய்யா கோயிலுக்கு சென்று கருடனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் கருடன் கோயில் கருவறைக்குள் சென்று நேற்றோடு 8 நாட்கள் ஆனதால் நேற்று முன்தினம் கோயிலில் திருவிழா நடத்தி அன்னதானம் வழங்கினர். இதனை தொடர்ந்து நேற்று அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் வீதியுலா வந்தார். அந்த சூழ்நிலையிலும் கருடன் வெளியில் செல்லாமல் உள்ளேயே இருந்தது. பக்தர்களால் வழங்கப்படும் பால், நவதானியம் போன்றவைகளை சாப்பிட்டு வருகிறது. கோயிலுக்குள் கருடன் வந்து தங்கியிருப்பதால் இதனை அதிசயமாக கருதும் பக்தர்கள் இனி இக்கோயிலில் மாதந்தோறும் திருவிழா நடத்தலாமா எனவும் யோசனை செய்து வருகின்றனர். பொதுவாக இந்துக்கள் கோயிலில் கும்பாபிஷேகத்தின் போது கழுகு பறந்தால் பக்தர்கள் சந்தோஷப்படுவார்கள். இந்நிலையில் நாராயண அவதாரமாக கருதப்படும் இந்த அய்யா கோயிலில் அவரின் வாகனமான கருடன் வந்து கோயிலுக்குள் பல நாட்கள் தங்கியிருப்பது பெரும் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.