திருநெல்வேலி : சுவாமி நெல்லையப்பருக்கு ரூ.2.25 லட்சம் செலவில் செய்யப்பட்ட தங்க கவசம் இன்று (11ம் தேதி) வழங்கப்படுகிறது. இதுகுறித்து கல்சுரல் அகடமி செயலாளர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது: நெல்லை டவுன் கல்சுரல் அகடமி சார்பில் நெல்லையப்பர் கோயிலில் உள்ள சுவாமி நெல்லையப்பருக்கு தங்க மூலம் பூசப்பட்ட கவசம் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நெல்லை டவுன் முத்துராமன் ஸ்தபதி மூலம் பன்னிரெண்டரை கிலோ எடையில் செம்பு கவசம் ஒரு மாதத்தில் உருவாக்கப்பட்டது. சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் ஸ்தபதி பங்கஜ் பண்டாரி மூலமாக 30 கிராம் தங்கத்தில் ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கோல்டு பவுடர் கோட்டிங் பிளேட்டிங் செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட கவசம் 30 ஆண்டுகள் தன்மை மாறாமல் இருக்கும். இதன் மதிப்பு ரூ.2.25 லட்சம். நெல்லையப்பருக்கு உருவாக்கப்பட்டுள்ள தங்க கவசம் இன்று (11ம் தேதி) மாலை 6 மணிக்கு நெல்லையப்பர் கோயிலுக்கு வழங்கப்படுகிறது. இதை இணை ஆணையர் புகழேந்திரன், செயல் அலுவலர் கசன் காத்த பெருமாள் ஆகியோரிடம் ஒப்படைக்கிறோம். நெல்லையப்பருக்கு மாத சிவராத்திரி, தமிழ் மாத பிறப்பு ஆகிய நாட்களில் இந்த கவசத்தை அணிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாணம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் ஐப்பசி திருக்கல்யாணத்தை நடத்தவும் கோயில் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு காசிவிஸ்வநாதன் கூறினார். பேட்டியின் போது தலைவர் எம்.ஆர்.குணசேகரன், துணைத்தலைவர் சொனா வெங்கடாச்சலம், இணைச் செயலாளர் சீனிவாசன் உடனிருந்தனர்.