கிள்ளை : கிள்ளை தைக்கால் பெரிய பள்ளி வாசலில் 265ம் ஆண்டு கந்தூரி மற்றும் சந்தனக்கூடு நிகழ்ச்சி மத நல்லிணக்க விழாவாக நடந்தது. கிள்ளை தைக்கால் பெரிய பள்ளிவாசலில் ஆண்டுதோறும் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 265ம் ஆண்டு நிகழ்ச்சியான கந்தூரி விழாவை முன்னிட்டு கடந்த 27ம்தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு நடந்த சந்தனக்கூடு நிகழ்ச்சியில் கிள்ளை தைக்கால் பரம்பரை டிரஸ்டி சையத் சக்காப் தலைமை தாங்கினார். தமிழக தர்காக்களின் ஒருங்கிணைப்பு பேரவை மாநில பொதுச்செயலர் சுல்தான், மாநில துணைத் தலைவர் கலீபா சாகிப், ஒருங்கிணைப்பாளர் முகம்மது இஸ்மாயில், நாகை மாவட்டத் தலைவர் சுல்தான் அலாவுதீன், மாவட்டச் செயலர் மன்சூர் ஹல்லாஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நாகராஜன் அய்யர் உள்ளிட்ட கிள்ளை பகுதி இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பங்கேற்று மத நல்லிணக்க விழாவாக பாத்தியா ஓதி கூட்டு வழிபாடு நடத்தினர். முன்னதாக மகான் சையத்ஷா பயன்படுத்திய 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரத்தால் வடிவமைக்கப்பட்ட காலணி உள்ளிட்ட பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.