மதுரை : மதுரையில் 175 வயதுள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் ஸ்தோத்திர பண்டிகை மற்றும் அறுப்பின் திருவிழா நடந்தது.மதுரை கீழவாசல்-காமராஜர் ரோடு சந்திப்பில், 175 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு மிஷனரிகளால் சி.எஸ்.ஐ., "மகிமையின் ஆலயம் முதன்முதலாக துவக்கப்பட்டது. மன்னர் திருமலை நாயக்கரின் குதிரை லாயமாக பயன்பட்டது இந்த இடம். அந்நாளைய கலெக்டர் பிளாக்பர்ன் மூலமாக முயற்சி மேற்கொண்டு, அவரை தொடர்ந்து வந்த கலெக்டர் பார்க்கர் காலத்தில், ஆலயம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.1845ல் டுவைட், செர்ரி என்ற கிறிஸ்தவ மிஷனரிகளால் 3315 ச.அடி பரப்பில் கட்டப்பட்டது. பின் 6362 ச.அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த ஆலயத்தில் 175வது அறுப்பின் பண்டிகை மற்றும் ஸ்தோத்திர திருவிழா நேற்று நடந்தது. சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் தலைமையில், ஆசிர்வாத செய்தி ஸ்தாபகர் ஆலன்பால், பொருளாளர் டேவிட்துரைசிங், தியாகராஜன் கலந்து கொண்டனர். அமைப்பாளர் ராஜசெல்வம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.