வத்திராயிருப்பு: மழை வேண்டி பிளவக்கல் அணையில் முஸ்லிம் மதரசா பள்ளி மாணவர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். வத்திராயிருப்பு உட்பட மாவட்டத்தின் செழிப்பான பகுதிகளிலும் மழையின்றி தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. அணைகளிலும், கண்மாய்களிலும் நீரின்றி விவசாயம் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. விவசாயம் மட்டுமின்றி மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கும் நீரின்றி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆங்காங்கு பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் மழைவேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிளவக்கல் பகுதி முஸ்லிம் மதரசா பள்ளியை சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மழைவேண்டி வறண்டு கிடந்த கோவிலாறு அணையில் இறங்கி சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் இமாம் பிலால்தீன் தலைமையில் பெரியாறு அணைக்கு சென்றும் பிரார்த்தனை பாடல்களை பாடினர்.இதுபோல் இரு அணை நீரும் இணையும் கிழவன் கோயில் பகுதியில் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தொழுகை நடத்தினர். ஏற்பாடுகளை பள்ளிவாசல் இமாம் சம்சுதீன், ஜமாத் நிர்வாகிகள் செய்தனர்.