உயிர் காக்கும் உபகரணங்களுடன் ’டோலி’யில் வருகிறது மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2016 12:12
சபரிமலை: உயிர் காக்கும் உபகரணங்கள் பொருத்திய புதிய டோலி உருவாக்க கேரள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ஐந்து கி.மீ. நடந்துதான் வரவேண்டும். இதில் மூன்று கி.மீ. செங்குத்தான ஏற்றமாகும். நீலிமலையும், அப்பாச்சிமேடும் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களை கூட திணறடித்து விடும். இதனால் உடல் பலவீனம் உள்ளவர்கள் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகும். இரண்டு மூங்கில் கம்புகளில் சாய்வு பிரம்பு நாற்காலியை கட்டி அதில் பக்தரை அமர வைத்து நான்கு பேராக துாக்கி வருவதுதான் டோலி. இதற்காக தேவசம்போர்டு கட்டணம் நிர்ணயித்துள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று வர 3400 ரூபாய். ஒரு வழி பயணத்துக்கு 2000 ரூபாய். இதில் 200 ரூபாய் தேவசம்போர்டுக்கும், மீதி பணம் தொழிலாளர்களுக்கு. டோளியின் வடிவத்தை மாற்றி அமைப்பது பற்றி ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சன்னிதானம் சுகாதார பொறுப்பு அதிகாரி டாக்டர் சுரேஷ்பாபு கூறினார். இந்த டோலியில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர், அவசர கால உயிர் காக்கும் மருந்துகள் வைக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்றும், நோயாளிகளை பம்பை கொண்டு செல்ல இதை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.