பிரான்மலை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் 150 ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில் 3 அடுக்குகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் மங்கைபாகர் சன்னதிக்கு அருகே அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலைகள் கிரில் கதவுகளால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. மார்கழி அதிகாலை பூஜைக்காக டிச.22ம் தேதி காவலர் வெளிக்கதவை பூட்டாமல் சென்றுள்ளார். நேற்று அதிகாலை பூஜைக்கு வந்த பக்தர்கள் மங்கைபாகர் தேனம்மை சன்னதி உண்டியலும், வடுகபைரவர் சன்னதி உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. பல லட்ச ரூபாய் பெறுமான 150 ஆண்டு பழமையான 2அடி உயர சுந்தரமூர்த்தி நாயனார் ஐம்பொன் சிலை திருடு போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
கொள்ளையர்கள் வெளிக்கதவு வழியாக உள்ளே நுழைந்து கிரில் கதவின் பூட்டை உடைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில் சூலாயுதத்தில் கயிறு கட்டி 30 அடி உயர காம்பவுண்ட் சுவர் வழியாக அச்சிலை இறக்கியுள்ளனர். மற்றொரு லையை துாக்க முடியாமல் அருகே விட்டு சென்றுள்ளனர். மேலும் 3 சிலைகள் திருட்டிலிருந்து தப்பின. பக்தர்களுடன் கோயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்,இரவு முழுவதும் உள்ளேயே தங்கி யிருந்து கயிறு மூலம் சிலையை இறக்கி விட்டு அதிகாலையில் பக்தர்களைப்போல் வெளியேறி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கோயில் கண்காணிப்பாளர் கேசவன் புகாரில் எஸ்.வி,மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.