பதிவு செய்த நாள்
13
அக்
2011
10:10
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் விழா அக். 5 ல் சாதி, மத நல்லிணக்க உறுதிமொழியுடன் துவங்கியது. தினம் கலைநிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சியுடன் 6 நாட்கள் கலை விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏழாம் நாளான நேற்று நடந்தது. இதற்காக அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது,முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து, பிற்பகல் 2.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடந்தது. அம்மன் கோயிலுக்கு செல்ல , அங்கு மஞ்சள் நீராட்டு , நேர்ச்சை செலுத்தல் நடந்தது. தொடர்ந்து அம்மன் ,பக்தர்களுக்கு "பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பறையர்குல மாவிளக்கு வழிபாடு முடிந்த பின், அம்மன் அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றிலும் நின்று ,பூக்கள் தூவி அம்மனை வழியனுப்பினர். விழாவை முன்னிட்டு வத்திராயிருப்பு பகுதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சரவணன், பக்தசபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.