பதிவு செய்த நாள்
13
அக்
2011
10:10
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய காலதாமதமாகும் என்பதால், மதிப்பீடு பணி துவங்குவது இரண்டு மாதங்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. இவற்றை மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழு, வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடி, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியை எப்போது துவக்குவது, அப்போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க உள்ளது. இதில், கோவிலில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அமைக்க நியமிக்கப்பட்டுள்ள, கெல்ட்ரான் நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.அப்போது, மதிப்பீடு பணிக்குத் தேவையான கோல்டு கேரட் அனலைசர், எலக்ட்ரானிக் எடை மிஷின், த்ரி டி கேமரா போன்ற பல உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் போது, அவற்றை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான மென்பொருளை கெல்ட்ரான் நிறுவனம் தயாரித்து அளிக்க வேண்டும். இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைய ஆறு வாரங்களாகும். அதனால், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.