பதிவு செய்த நாள்
13
அக்
2011
10:10
பனமரத்துப்பட்டி: மல்லூர் சுனைக்கரட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலை சுற்றி கிரிவலப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, மல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.மல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இதில், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி.பிரச்சாரத்தின்போது சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:மல்லூர் சுனைக்கரட்டில், பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்படும்.மல்லூரில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் பயன்பாட்டுக்கு, அடிப்படை வசதிகளுடன் அலுவலக கட்டிடம் கட்டித் தரப்படும். அனைத்து பகுதிகளுக்கும், ஒரு நாள் விட்டு, ஒருநாள் என, சுழற்சி முறையில், காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அத்திக்குட்டையில் இருக்கும் கழிவு நீரை வெளியேற்றி, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக தடுப்பு சுவர் அமைக்கப்படும். மல்லூரில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அனைத்து வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து புறநகர் பஸ்களும், மல்லூர் வந்து செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மல்லூர் பகுதியில், எரிமேடை, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளுடன் கொண்ட நவீன மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, உள்ள மயானத்துக்கு சாலை வசதிகள் செய்து தரப்படும்.சலவை தொழிலாளிகளின் வாழ்க்கை தரம் மேம்படும் வகையில், துணிகள் வெளுக்கவும், உலர வைக்கவும் படித்துறை அமைக்கப்படும். மல்லூர் சுற்றுவட்டார பகுதியில், சிறந்த பொழுபோக்கு மையங்கள் இல்லை. அதனால், வண்டிப்பேட்டையில் சினிமா தியேட்டர் கட்டப்பட்டு, அதன் மூலம் பேரூராட்சிக்கு வருமானம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க, நவீன உபகரணங்கள் கொண்ட விளையாட்டு திடல் அமைக்கப்படும். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சென்ற மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியை, மீண்டும் மல்லூர் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கொண்டு வர, சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் சிரம்மங்களை குறைக்கும் வகையில், மல்லூரில் சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். மல்லூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி, 15வார்டுகளிலும், ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக நவீன பொது கழிப்பிடம், கான்கிரீட் ரோடு , தார்சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும். நாள்தோறும் குப்பைகள், சாக்கடைகளை சுத்தம் செய்து, சுகாதாரம் காக்கப்படும்.பொதுமக்களுக்கு, பேரூராட்சி மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளையும், நேர்மையான முறையில், தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.