விநாயகருக்குரிய மங்கல சின்னம் ஸ்வஸ்திக். செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் இதில் இடம் பெற்றிருக்கும். ஸ்வஸ்தி என்று என்பதற்கு இடையூறு இல்லாதது என்று பொருள். யஜுர் வேதத்தில் இந்திரனைக் குறித்த ஸ்லோகத்தில் ஸ்வஸ்தி என்பது தடையற்ற நல்வாழ்வு என்னும் பொருளில் இடம் பெற்றுள்ளது. திருமாலின் கையிலுள்ள சக்ராயுதம் ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வர். வாசல் மற்றும் பூஜையறையில் ஸ்வஸ்திக் கோலமிட்டால் எட்டுத் திசைகளில் இருந்தும் எந்த இடையூறும் நம்மைத் தீண்டாது என்பது ஐதீகம். கண் திருஷ்டி போக்கும் பரிகாரமாக வீட்டில் ஸ்வஸ்திக் வரையும் வழக்கம் ஜெர்மனியில் இருந்தது. சூரியனின் சின்னமாகவும் கருதப்படும் இதை வணங்கினால் உடல்நலம் மேம்படும் என்பர்.