பதிவு செய்த நாள்
13
அக்
2011
10:10
திருவனந்தபுரம்; பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கென பிரத்யேகமாக போலீஸ் நிலையம் அமைக்க, கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரின் கெடுபிடி சோதனைகள் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, பக்தர்களுக்கு சிரமமின்றி பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து விவாதிக்க, நேற்று முன்தினம் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், குருவாயூர் தேவஸ்வம் போர்டு நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், குருவாயூர் கோவிலுக்கென பிரத்யேகமாக, "டெம்பிள் போலீஸ் நிலையம் அமைப்பது, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அடங்கிய குழு, கோவில் பாதுகாப்பை மேற்கொள்வது, போலீஸ் நிலையம் இயங்குவதற்கான கட்டடத்தை, குருவாயூர் தேவஸ்வம் போர்டு வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டது. மேலும், கோவில் பாதுகாப்புக்கு தேவையான ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர்கள் போன்ற நவீன உபகரணங்களை வாங்க, ஒரு கோடி ரூபாயை தேவஸ்வம் போர்டு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.