பதிவு செய்த நாள்
13
அக்
2011
11:10
குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் இன்று (13ம் தேதி) ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடக்கிறது.குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் மற்றும் திருவிலஞ்சி குமாரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடந்தது. விழாவின் 4ம் நாளான நேற்று மாலையில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் திருவிலஞ்சி குமாரரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாளும் எழுந்தருளினர்.விழாவின் 5ம் நாளான இன்று (13ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. காலை 8.40 மணிக்கு மேல் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 4 தேர்கள் அடுத்தடுத்து வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. மாலையில் திருவிலஞ்சி குமாரர் வெள்ளி சப்பரத்திலும், சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளல் செய்கின்றனர்.வரும் 15ம் தேதி காலை, இரவில் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ம் தேதி காலையில் சித்ரசபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 18ம் தேதி திருவிலஞ்சி குமாரர் பிரியாவிடை, விசு தீர்த்தவாரி மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.