பதிவு செய்த நாள்
06
ஜன
2017
12:01
கோவை:அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், கோவையில் நாளை தேர்த்திருவிழா நடைபெறுகிறது.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கோவையில், 25வது ஆண்டாக, தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த ஒரு வாரமாக, கோவை அவிநாசி ரோடு கொடிசியா கண்காட்சி வளாகம் அருகே உள்ள ஜெகன்நாதர் கோவிலில், பகவான் ஜெகன்நாதர், பலதேவர்மற்றும் சுபத்ரா தேவியாருக்கு திருமஞ்சண சேவை, ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், பக்தி வினோத சுவாமியின் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.
ராஜவீதியிலுள்ள தேர்நிலைத்திடலில், நாளை மாலை, 4:00 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. பல வண்ண மலர்களால், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஜெகன்நாதர், பல தேவர், சுபத்ரா தேவி ஆகியோர் முன்னதாக எழுந்தருளுவிக்கப்படுகின்றனர். மாலை நடைபெறும் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் புடைசூழ தேர்வடம் பிடித்துஇழுக்கப்பட உள்ளது. தேர்நிலைத் திடலிலிருந்து புறப்பட்டு, தேர், ராஜவீதி வழியாக, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக மீண்டும், ராஜவீதி தேர்நிலைத்திடலை அடைகிறது. தேர்த்திருவிழாவில், ஆடல், பாடல், கிருஷ்ணலீலா தரங்கினி, நடனம், நாட்டியம், பஜனை ஆகியவை நடைபெறுகிறது. பகவத்கீதை புத்தகம், சுவாமி படங்கள், சுவாமி பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. பக்தர்கள் வசதிக்காக வழிநெடுக, தண்ணீர்பந்தல்கள், குளிர் பானங்கள், நீர் மோர் ஆகியவை வினியோகிக்கப்பட உள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்று, இசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) துவங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதையொட்டி, பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில், இஸ்கான் சார்பில், 25 ஆண்டு தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி, தேர்த்திருவிழாவுக்கு வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டலில் உள்ள கலையரங்கில் இன்று மாலை 6:30 மணிக்கு, பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் கலெக்டர் ஹரிஹரன் பங்கேற்கிறார். இஸ்கான் அமைப்பின் முதன்மை நிர்வாகி ஜெயப்பதாக சுவாமிகள், கோவை மண்டல செயலாளர் பக்திவினோதசுவாமி ஆகியோர் சிறப்புரைநிகழ்த்துகின்றனர். ஜன., 8ம் தேதி, பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், நவ இந்தியாவிலுள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவில், சலிவன் வீதியிலுள்ள வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடை வீதியிலுள்ள லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமி கோவில் மற்றும் ராம்நகர் ராமர் கோவிலில் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவில் இஸ்கான் சார்பில் சிறப்புபஜனைகள் நடைபெறவுள்ளன.