பதிவு செய்த நாள்
14
அக்
2011
11:10
குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடந்தது.குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை கோயிலில் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் ஐப்பசி விசு திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிலஞ்சி குமாரர், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடந்தது. ஐந்தாம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது.சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். இதன் பின்னர் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் முருகன் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர் அடுத்தடுத்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம் முழங்க தேரோட்டம் நடந்தது.மாலையில் திருவிலஞ்சி குமாரர் வெள்ளி சப்பரத்திலும், சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுகுமாரன் செய்திருந்தார்.நாளை (15ம் தேதி) காலை, இரவில் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 16ம் தேதி காலையில் சித்ரசபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளலும், 18ம் தேதி காலையில் விசு தீர்த்தவாரியும், ரிஷப வாகனத்தில் உலாவும், திருவிலஞ்சி குமாரர் பிரியா விடை பெறுதலும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.