பதிவு செய்த நாள்
14
அக்
2011
11:10
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்ற விழா கோலாகலமாக நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் வரலாற்று சிறப்புகள் கொண்டதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி சித்திரை பெருந்திருவிழாவை போல் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தாண்டு கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஜப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (அக்.12) அங்குரார்ப்பணம் நடந்தது. இதையடுத்து நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் உலா எடுத்துவரப்பட்டு கோயிலுக்கு வந்ததடைந்தது. மேலும் கோயில் கொடிமரம் பூக்கள் மற்றும் மாலைகள், தென்னங்கீற்றுகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செயப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்த கோஷங்களுக்கு மத்தியில் கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகன் நடந்தது. சிறப்பு பூஜைகளை சுவாமிநாதன், செண்பகராமன், சங்கரன், கோபாலாகிருஷ்ணன் ஆகிய பட்டர்கள் செய்தனர். இரவில் மண்டகப்படிதாரர்களான கோவில்பட்டி பிராமணாள் சமூகம் சார்பில் புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதிஉலா நடந்தது. கொடியேற்ற விழாவில் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், ஆய்வாளர் சுப்பிரமணியன், ஏராளமான மண்டகப்படிதாரர்கள், தேர்த்தடி முறைதாரர்கள் மூப்பன்பட்டி பொன்னுச்சாமி குடும்பத்தினர், முன்னாள் அரங்காவலர் திருப்பதிராஜா, மதிமுக ஒன்றிய செயலாளர் பவுண்மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இரண்டாம் திருநாள் மண்டகப்படியான இன்று இனாம்மணியாச்சி பூலோகப்பாண்டியன், ரத்தினவேல்சாமி குடும்பத்தினர், மூன்றாம்நாள் மண்டகப்படி நாளில் இல்லத்து பிள்ளைமார் சங்கத்தினரும், நான்காம் மண்டகப்படியன்று நெல்லை மேடைத்தளவாய் கட்டளை சார்பிலும், ஐந்தாம் திருநாளன்றுகோவில்பட்டி விஸ்வகர்ம நகைத்தொழில் சங்கம் சார்பிலும், ஆறாம் திருநாளன்று தூத்துக்குடி காசுக்கடை அழகிரிசாமி சார்பிலும், ஏழாம் திருநாளன்று சைவ வேளாளர்கள் சங்கம் சார்பிலும், எட்டாம் திருநாளன்று சைவ செட்டியார்கள் சங்கம் சார்பிலும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 9ம் திருநாளன்று ரதாரோகனம் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 10ம் திருநாளன்று ஆயிர வைசிய காசுக்கார செட்டிப்பிள்ளைகள் சங்கம் சார்பிலும், 11ம் திருநாளன்று கோவில்பட்டி ராமலிங்கம் மற்றும் மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தினர் சார்பிலும் சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா வருகிறார். இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன் குடும்பத்தினர் சார்பில் திருக்கல்யாண சிறப்பு நிகழ்ச்சிகளும், பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், சுவாமி யானை வாகனத்திலும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.